தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் முகநூலில் அறிமுகமாகி தனக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்காக பணம் தேவைப்படுவதாக நட்புடன் பேசி ரூபாய் 33,73,000/- பணம் மோசடி செய்த பெண் மற்றும் அவரது கணவர் கைது செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு பெண் ஒருவர் ஃபேஸ் புக் (முகநூல்) வழியாக அறிமுகமாகி பின்னர் நட்புடன் பேசி தனக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துள்ளதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் நபரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் அந்தப் பெண்ணின் வார்த்தையை நம்பி அவருக்கு 33,73,190/- பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் இதுகுறித்து NCRPl (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கேரளம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் பாலமுருகன் (32) மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து நபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் பாலமுருகன் மற்றும் அவரது மனைவியை நேற்று (05.04.2025 ) கேரள மாநிலம் சென்று கைது செய்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும் இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூர் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2022ஆம் ஆண்டு பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.