மதுரை கேகே நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தினபூமி நாளிதழின் உரிமையாளர். இவரும் இவரது மகன் ரமேஷ் இருவரும், நாகர்கோவில் தோவாளையில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ரமேஷ் ஓட்டியுள்ளார். கார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி மேம்பாலத்தின் நடுவில் தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் திரும்பி மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து சென்று படுகாயங்களுடன் இருந்த ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிமாறன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி நிருபர் எஸ். முத்துக்குமார்