தூத்துக்குடியில் ஒர்க்ஷாப் ஒன்றில் நிறுத்தி வைத்திருந்த பைக் ஒன்றில் நல்ல பாம்பு பதுங்கி இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மீனாட்சிபுரம் அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து தகவலறிந்து, அங்கு சென்ற தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர், பைக்கின் பாகங்களை கழற்றி உள்ளே இருந்த சுமார் 2 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை, வனப்பகுதியில் விட கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறும்போது, தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் சூடான இடங்களில் தஞ்சம் அடைவது இயல்பு. பைக் இன்ஜின் பகுதி சூடாக இருப்பதால் பாம்புகள் பைக்கில் புகுந்து கொள்ளும். அப்படித்தான் பைக்கில் அந்தப் பாம்பு பதுங்கியுள்ளது. ஆகவே, பைக்கை நிறுத்துபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.